மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை – வெள்ளம் வடியாததால் 50% பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. பல பகுதிகளில் இன்னும் தொலைதொடர்பு இணைப்பு சீரமைக்கப் படவில்லை. மழை -வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்ட மூத்த குடிமக்கள் இதுவரை மீட்கப்படவில்லை. அத்தகைய சூழலில் உள்ள மக்கள் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையினரால் அமைக்கப்பட்ட மீட்புக் குழுக்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வாழும் பகுதிகளில் மழை நீரை வடியச் செய்வதிலும், மரங்களை அகற்றுவதிலும் மட்டும் தான் ஆர்வம் காட்டுகின்றனர். சாதாரண மக்கள் வாழும் பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறவில்லை என்கின்றனர் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பேரிடரை சந்தித்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள நிலையில், இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்புக்கான இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும், பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், சென்னையின் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (07.12.2023) தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார். அவர் ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவார் எனவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அவருடன் செல்வர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், பிற்பகல் 1 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளார்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் டெல்லி செல்லும் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்து தமிழகத்திற்கான நிதி வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
அதுவரை தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரனப்பணிகளை மேற்க்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்னமும் பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.சில இடங்களில் மின்சாரம்,உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை என பொது மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றன