உளுந்தூர்பேட்டை அருகே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தேவியானந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). இவர் செங்கல் அறுக்கும் கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் 2 மகள்களுக்கு திருமணமாகி சென்று விட்டனர்.
இவரது 3-வது மகள் தீபா (29) என்ற காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் விட்டு தனது மனைவியுடன் செங்கல் சூளை வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி பெண் தீபா 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அதேகிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் செந்தில் குமார் (31) என்ற திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள வாலிபர், தீபாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் வீட்டுக்கு வந்து பார்த்த போது தீபாவுக்கு வயிறு பெரியதாக இருந்துள்ளது. வயிறு வலிப்பதாக தீபா கூறியதையடுத்து அவரை பெற்றோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தனர்.

அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக செந்தில்குமாரின் தந்தை நாகப்பன் மற்றும் தாய் பிச்சம்மாள் ஆகியோரிடம் சென்று ஏழுமலை கேட்ட போது இதற்கு தனது மகன் பொறுப்பல்ல என கூறி அவரை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் போலீசார்,

செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை நாகப்பன், தாய் பிச்சம்மாள் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேவியானந்தல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.