திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக்கொள்ள வகைசெய்யும் அனுமதியை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பது,”ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அனைத்து வீடுகளிலும் மதுவைப் பயன்படுத்தும் வகையில் அறிவித்து மது விற்பனையை விஸ்தரித்திருப்பது இதுவரை போதைக்கு அடிமை ஆகாதவர்களையும் குறி வைத்து சமூக மது பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை விடியா அரசு மேற்கொண்டுள்ளதா?
தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறுவர்கள், இளைஞர்கள் போதை வஸ்துக்களின் தாரளப் புழக்கத்தினால் அதற்கு அடிமையாகி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது, போதையில் வாகனத்தை இயக்கி பொதுமக்களின் உயிருக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற செயல்கள் அதிகமாகி வரும் சூழலில் இந்தச் சிறப்பு அனுமதி கூடுதலாக பல உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கும், பல குடும்பங்களை சீரழிவிற்கு உள்ளாக்குவதற்குமான முயற்சியே.
இந்த சிறப்பு அனுமதி மூலம் இளைஞர்களின் சந்ததியையே போதை பழக்கத்திலேயே வைத்திருந்து சிந்திக்கவிடாமல் செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா?
எனவே, இந்த சிறப்பு மது அனுமதி அரசாணையை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டி அமமுக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.