திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா சிவா, பாஜகவில் மீண்டும் ஓ.பி.சி. அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் தொடருவார் என்று அண்ணமாலை அறிவித்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் தனது ட்விட்டரில் பதிவினை திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோவில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசியதாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. தொடந்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், சூர்யா சிவாவை பாஜகவின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே , திருச்சி சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவியது. இது உண்மையா என்பது தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அறிவித்தார், ஓ.பி.சி. அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் மீண்டும் தொடரவும் திருச்சி சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார். இந்நிலையில், திருச்சி சூர்யா சிவா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுக்கும் வகையில் பதிவுகளை திருச்சி சூர்யா சிவா வெளியிட்டுள்ளார்.