கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது 12 அடி ஆழமுள்ள பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புகழேந்தி வேளாங்கண்ணி நகர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் முருகநாதன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பத்து பேர் புத்தாண்டு கொண்டாட ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுலா சென்றனர். ஈஷா மையத்தில் பல இடங்களை சுற்றிப் பார்த்தனர். அதன் பின்னர் குடும்பத்தினர் அனைவரும் நரசீபுரம் சாலையில் உள்ள புதுக்காட்டு வாய்க்கால் பகுதியில் உள்ள அணைக்கட்டுப் பகுதிக்கு சென்றனர். பின்னர் அணைக்கட்டில் குளிக்கச் சென்றுள்ளனர். அனைவரும் அணைக்கட்டு பகுதியில் கரையோரம் குளித்து கொண்டிருந்தனர்.அப்போது, புகழேந்தி அணைக்கட்டில் இறங்கி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த போது திடீரன தண்ணீரில் மூழ்கியுள்ளார். அந்த பகுதி 12 அடி ஆழமுள்ள பகுதி.

அந்த ஆழப்பகுதிக்குச் சென்று புகழேந்தி நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றும் முயற்சி பலன் கொடுக்கவில்லை. இது பற்றி ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினர் பல இடங்களில் சிறுவனை தேடியுள்ளனர். மேலும் அணைக்கட்டில் மூழ்கிய சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பல இடங்களில் தேடிய அவர்கள் சிறிது நேரத்தில் சிறுவனை சடலமாக மீட்டனர். இதை தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து பெற்றோர்கள் அழுது புலம்பினர். அந்த பகுதியில் பெரும்பாலும் யாரும் குளிப்பதில்லை. அதையும் மீறி சிறுவன் புகழேந்தி குளிக்க சென்று இப்படி விபரீதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் யாரும் குளிக்கக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த பகுதிக்கு தற்போது பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை நாளில் வெளியூர் செல்லும் போது பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.