‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் ஞாயிறு அன்று நடைபெற்ற விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகை சிம்ரன் பேசுகையில், ”அந்தகன் படத்தின் கதை, திரைக்கதை நன்றாக இருக்கிறது. தியாகராஜனின் இயக்கத்தில் இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று அனைவரும் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,” என்றார்.
அவரை தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ”இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்.

சிம்ரன், பிரசாந்துடன் இதற்கு முன் ஆறு படங்கள் நடித்திருக்கிறார். இந்த படத்தின் உரிமையை வாங்கிய பிறகு ஏன் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க கூடாது என யோசித்தேன். இது தொடர்பாக நான் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் இந்தி படத்தை பார்த்து விட்டேன். அதனால் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்.
பெசன்ட் ரவி- பிரசாந்த் நடிக்கும் படத்தில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவேன். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மறைந்த நடிகர் மனோபாலா, ஜெயம் கோபி, விஜேந்தர், பூவையார், லீலா சாம்சன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
‘அந்தகன்’ அருமையான படைப்பு. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது.
இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன்.

நானும் சிம்ரனும் இதுவரை ஆறு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் எனக்கு கிடைத்த அற்புதமான சக நடிகை. எனக்கு உற்ற நண்பி. அற்புதமான நடனக் கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று ‘அந்தகன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.