சின்னசேலம் கடைத்தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அனுமதி பெற்று புகையிலை கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கம்பெனி சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் உள்ள கடைத்தெருவில் இயங்கி வருகிறது.
இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அரசுக்கு புகார் சென்றதாக தெரிகிறது. மேலும் இந்த நிறுவனம் சின்னசேலம் கடைத்தெருவில் ஒரு தெரு முழுவதும் இயங்குவதால் கழிவு நீர் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுகாதார துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து பல புகார்கள் சென்றாலும் சரிகட்டி விடுகின்றனர். அந்த பகுதி மக்கள்.
இதையடுத்து சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளுக்கு சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வுக்கு வந்தனர். மேலும் சின்னசேலம் வானகொட்டாய் பகுதியில் கட்டப்பட்டு வரும் நுகர்பொருள் வாணிக கிடங்கினை ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு தியாகதுருகம் செல்ல வேண்டும். ஆனால் சட்டமன்ற உறுதிமொழிக்குழுவினர் திடீரென்று உடன் வந்த அரசு அதிகாரிகளிடம்கூட சொல்லாமல் சின்னசேலம் கடைத்தெருவில் இயங்கிவரும் புகையிலை கம்பெனிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கழிவு நீர் வெளியே செல்வதை குழுவினர் பார்த்ததாக தெரிகிறது. மேலும் இந்த கம்பெனி இயங்க அரசு அனுமதி உள்ளதா என்று கேட்டனர். அப்போது கம்பெனி நிர்வாகம் அரசு அனுமதி பெற்றுதான் நடத்தி வருகிறோம் என்று கூறினார்கள். இதைக்கேட்ட குழுதலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அரசு அனுமதி உள்ளிட்ட கம்பெனி ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வருமாறு கூறினார். இதையடுத்து ஆவனங்களை ஆய்வு செய்த குழுதலைவர் வேல்முருகன் கூறும்போது குறைந்த அளவு புகையிலைக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு டன் கணக்கில் வைத்து உற்பத்தி செய்கின்றனர்.
அரசின் நிபந்தைனைகளை பின்பற்றாமல் இந்த நிறுவனம் செயல்படுவதாக கருதியதன் அடிப்படையில் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். இதனால் சின்னசேலம் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.