தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23,
வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல் நிலை தேர்வு தகுதி தேர்வு மட்டுமே. இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் பணி நியமனத்திற்கு எடுத்துகொள்ளப்படாது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்தனர். அதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள் 1,25,726 பேர், பெண்கள் 1,12,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் இன்று குரூப் 1 தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 797 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒரு தேர்வு மையத்திற்கு ஒருவர் வீதம் 797 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குரூப் 1 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகையில் (ஓ.எம்.ஆர் முறை) நடத்தப்படும். இந்த தாள் 200 மதிப்பெண்களுக்கு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும். பொது அறிவு பிரிவு, பட்டப்படிப்பு தரத்தில் 175 கேள்விகளும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பிரிவு,
பத்தாம் வகுப்புத் தரத்தில் 25 கேள்விகளும் என கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த வினாத்தாளில் கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்று இருக்கும்.
தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்படியான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
1. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு சென்றிருக்க வேண்டும்.
2. காலை 9 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
3. தேர்வு மையத்திற்கு கட்டாயமாக அனுமதி சீட்டினை எடுத்துச்செல்ல வேண்டும்.

4. அதோடு, ஆதார் அட்டை/ பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டும்.
5. அனுமதி சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலோ,
தேர்வர்கள் தன்னுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு, அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் அடையாள அட்டை நகலை இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும்.

6. ஓஎம்ஆர் தாளை கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும்.
7. தேர்வர்கள் தேர்வு அறைக்குள் கருப்பு நிற பேனா, அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
8. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண கடிகாரம் அணிந்து செல்லலாம்.