உடுமலை அருகே மலைவாழ் மக்கள் தொடர்மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அடுத்த உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளா வனத்துறையினர் அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கம்பி வேலி அமைத்து தமிழக பகுதி மலைவாழ் மக்கள் சென்று வர அனுமதி மறுத்தது.
இதனால் மலைவாழ் மக்கள் 6 கிமீ சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக,

இப்பகுதி மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அடிப்படை தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கோ அவர்கள் ஆற்றில் இறங்கி வர வேண்டியுள்ளது.
மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும் ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் வர முடியாத சூழல் உள்ளது.

மலைவாழ் மக்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தோளில் சுமந்த படி உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடந்து செல்கின்றனர். தற்போது மழை தொடர்ந்தால் 600 குடும்பங்களும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சு நடத்தி பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சம்பக்காடு பகுதியை மீட்டு தர வேண்டும் என்பதே அப்பகுதி மலைவாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.