கட்சி கொடி இல்லாத கிராமம் இருக்கலாம், கட்டிங் இல்லாத கிராமம் இருக்காது மது குடித்து உயிரிழந்த குடும்பத்தில் உள்ள இளம் விதவைகளுக்கு ரூபாய் பத்தாயிரம் பென்ஷன் வழங்கிட வலியுறுத்தி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் செயலாளர் ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நாளை முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

அந்த சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். ஆறுமுகம் போட்டியிடப் போவதாகவும், அதற்காக டெபாசிட் தொகை கட்டுவதற்கு விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகள் ஓரமாக சிதறி கிடக்கும் காலி பாட்டில்களை பொறுக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து டெபாசிட் கட்டவிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
பொதுமக்கள் தங்களுக்கு வாக்களித்தால் தமிழ்நாடு முழுவதும் மது குடித்து உயிரிழந்த குடும்பத்தில் உள்ள இளம் விதவைகளுக்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசுவோம்,

அதேபோன்று மது குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பென்ஷன் தொகை வழங்க வலியுறுத்துவோம். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மது கொள்கை விஷயத்தில் நாணயம் போல நடந்து கொள்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் எட்டு மது ஆலைகள் உள்ளது எனவே இந்த இடைத்தேர்தலில் எங்களுக்கு வாக்களித்தால் மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவோம் என்றனர்.

தமிழகத்தில் மட்டும் 36,000 கோடி மதுபானத்தில் வருமானம் வருகிறது. அதனால் நாங்கள் கோரிக்கை வைக்கும் உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது மட்டும் அல்ல கட்சி கொடிகள் இல்லாத கிராமம் கூட இருக்கும் ஆனால் கட்டிங் இல்லாத கிராமம் இருக்காது என்றனர். மேலும் தலைவிரி கோலத்துடன். கையில் மது பாட்டில் மற்றும் தாலி கயிறுடனும் பேருந்து நிலையம் பகுதிகளில் காலி மதுபாட்டில்களை பொறுக்கி மக்களிடம் ஆதரவு திரட்டினர்.