தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் டாஸ்மாக் பார் உரிமையாளரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த இன்னொரு டாஸ்மாக் பார் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம், அடுத்த பெரியகுளம் அருகே உள்ள கிராமம் வடுகப்பட்டி. இங்குள்ள தேவர் தெருவை சேர்ந்த 45 வயதாகும் முருகன் என்பவர் ஜெயமங்கலத்தில் இருந்து குள்ளப்புரம் செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார்.

அதே வடுகப்பட்டி தேவர் தெருவை சேர்ந்தவர் பிரபுதேவா . இவருக்கு 35 வயது ஆகிறது. பிரபுதேவா தேனி அருகே பின்னத்தேவன் பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பாரினை நடத்தி வருகிறார். உறவினர்களான முருகன் மற்றும் பிரபுதேவா இடையே தொழிலில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடை விடுமுறையாகும்.

ஆனால் தேனி அருகே பின்னதேவன் பட்டியில் பிரபுதேவா நடத்தி வந்த டாஸ்மாக் பாரில் அரசு அனுமதி இன்றி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 900 மது பாட்டில்கள் இருந்தது. அதனை தேனி அல்லிநகரம் போலீசார் சோதனை செய்து கைப்பற்றினர்.
இந்த நிலையில் மே 1 ஆம் தேதி சட்டவிரோதமாக பாரில் மதுவிற்பனை செய்ததாக வடுகப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரையும் அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்த தகவலை போலீசாருக்கு தனது உறவினரும் டாஸ்மாக் பார் உரிமையாளருமான முருகன் தெரிவித்ததாக சந்தேகப்பட்ட பிரபுதேவா, அவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு வடுகப்பட்டி கலையரங்கம் அருகே முருகனுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரபுதேவா, தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து டாஸ்மாக் பார் உரிமையாளரான முருகனை சரமாரியாக வெட்டினார்.

அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். பின்னர் பிரபுதேவா அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனே தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பெரியகுளம் டிஎஸ்ழு சூரக்குமாரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரபுதேவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் வடுகப்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.