அமெரிக்காவில் விமானம் ஒன்று பறக்கும் போது அதில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த விமானத்தில் 249 பயணிகள் பயணித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்த விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பித்தது.
பேருந்துகளிலும், சரக்கு வாகனங்களிலும் திடீரென்று சக்கரங்கள் கழன்று ஓடி விபத்தில் சிக்கிய செய்தியை கேள்வி பட்டு இருப்போம். அப்போது கார்கள் கூட இப்படி விபத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.

ஆனால், விமானங்களில் இப்படி டயர் கழன்று விழுந்தது என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் புருவத்தை உயர்த்தி படிப்பது புரிகிறது.
அதிபர் பரபர கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமனி வைத்திருக்கும் கார் ஓடிக் கொண்டு இருக்கும் போது காருக்கு முன்னால் காரின் ஒரு சக்கரம் கழன்று ஓடும்.. கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் ஒரு விமானத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் ரன்வேயில் சீறிப்பாய்ந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அப்போது திடீரென்று விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் விழுந்தது.
விமான நிலைய ஊழியர்கள் கார்களை நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் டயர் விழுந்து ஓடியது. அதில் கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விமானத்தில் 249 பயணிகள் பயணித்துள்ளனர். உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
விமானத்தின் ஒரு சக்கரம் மட்டுமே கழன்று விழுதிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பத்திரமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவில் போயிங் ரக விமானம் தொடர்ச்சியாக தரக்கட்டுப்பாடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கதவு உடைந்து விமானத்தை விட்டு பிரிந்து சென்றது. இதன் காரணமாக போர்ட்லாண்டு விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற தரக்கட்டுபாட்டு சிக்கல்களை தீர்க்க 90 நாட்களில் செயல் திட்டத்துடன் வர வேண்டும் என்று அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டு இருந்த நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.