புதுச்சேரி மாநிலம், தவளக்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான புதுக்கடை பஞ்சாயத்தில் மேட்டுப்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செல்வராசு (75), நாகூராள் (68), தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சில தினங்களுக்கு முன், சாலை விபத்தில் செல்வராசுக்கு கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நாகூராள் வயல் வேலைக்கு செல்வது வழக்கம். இருவரும் தமிழக அரசின் முதியோர் உதவி தொகை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை டிப் டாப் ஆசாமி ஒருவர், நாகூராளிடம் வந்து, அம்மா.. நீங்க முதியோர் பென்ஷன் வாங்குறீங்க தானே? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆமா சார் என்று கூறியுள்ளார். உடனே அந்த ஆசாமி உங்களுக்கும், உங்க கணவருக்கும் போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.8 ஆயிரம் பணம் வந்திருக்கு.
நீங்கள் ரூ.2750 பணம் கட்டினால் தான் மொத்த பணமும் கிடைக்கும், இல்லையென்றால் அரசுக்கே அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த டிப்-டாப் ஆசாமி வங்கி செலான், நோட்டு ஆகியவைவற்றை வைத்து கொண்டு யாருடனோ போனில் பேசுவது போல், சார் சொல்லுங்க சார், 28 பேருக்கு கொடுத்தாச்சு சார், இரண்டு பேரு தான் பாக்கி, இதோ அவங்க கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்.
இதோ உடனே அனுப்பி வைக்கிறேன், என்று கூறி அங்குமிங்குமாக நடந்து கொண்டே இருந்துள்ளார். இதை நம்பிய நாகூராள், அந்த டிப் டிாப் ஆசாமியிடம் ரூ.2750 பணத்தை கொடுத்துள்ளார்.

அதை வாங்கிய ஆசாமி ஒரு வங்கி செலானில் ரூ.8 ஆயிரம் எனவும் கணக்காளர் கையெழுத்திடும் இடத்தில் ரூ.1000 எனவும் எழுதி, ஒரு கணக்கு நம்பரை அவசரம் அவசரமாக எழுதி கொடுத்து விட்டு, அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பெற்று கொள்ளலாம் என கூறி விட்டு பணத்துடன் மாயமானார்.
இதை அடுத்து ரேஷன் கடைக்கு சென்று நாகூராள் கேட்ட போது, தான் ஏமாந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். வடிவேலு ஒரு படத்தில் போஸ்ட் மேனிடம் வேறு ஒருவரின் முதியோர் பென்சனை தனக்கு வந்ததாக கூறி ஏமாற்றி வாங்கி கொள்வார்.

அதுபோல் மூதாட்டியிடம் மர்ம ஆசாமி பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.