ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்தம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உறுதி செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.

மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் ஆசி பெற்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தொடர் சட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக இன்றைக்கு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இதற்காக முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களையும், அவர்களின் உரிமைகளையும் காப்பதில் அஇஅதிமுக எப்பொழுதும் உறுதியோடு இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு மேலும் ஒரு சாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.