ஒருதலை காதல் தொல்லையால் மதுபான பார் மீது ரவுடி வெடிகுண்டு வீசியதால் குடிமகன்கள் அலறியடித்து ஓடினர்.
வில்லியனூர் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் புதுச்சேரி – விழுப்புரம் மெயின் ரோடு பங்கூர் ஒரு பகுதியில் உள்ள தனியார் பாரில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக தகவல் வந்தது. இதை அடுத்து இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அரியூர் பாரதி நகரைச் சேர்ந்த ரவுடி செல்வா என்பவர் நடந்து வந்து பாக்கெட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டை எடுத்து பாரின் ஷெட்டர் மீது வீசியதும், அப்போது பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து புகை மூட்டம் ஏற்பட்டு பாருக்கு வந்த குடிமகன்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதும் தெரிய வந்தது. இதை அடுத்து பாரின் கேஷியர் பிரபு, வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செல்வா (20) அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து உள்ளார். தற்போது அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தப் பெண் பின்னால் செல்வா சுற்றி வந்து லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினரான சபரி என்பவர் செல்வாவை கண்டித்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் செல்வாவை சபரி அடித்ததாக கூறப்படுகிறது.
சபரி மலேசியாவில் இருந்து வந்துள்ளதால் அவர் மீது வழக்கு போட வைத்து அவரை மலேசியா செல்லாத வாரும், அவரை அடிக்க வேண்டும் என்றும் பழிவாங்கும் நோக்கத்தோடு செல்வா இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சபரி பங்கூரில் உள்ள தனியார் பாரில் மது அருந்துவதாக செல்வாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அவரை மிரட்ட வேண்டும் என்றும் அவர் பாரில் இருந்து வெளியே வந்தவுடன் அடிக்கவும் திட்டமிட்டு செல்வா நாட்டு வெடிகுண்டை பாரின் மீது வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து தலைமறைவாக உள்ள செல்வா உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சபரியை மிரட்ட வேண்டும் என்றும் செல்வா கூறியதன் பெயரில் அவரின் கூட்டாளியான விக்கி பட்டாசு வாங்கி வந்து கெண்டியாங்குப்பம் சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் 3 நாட்டு வெடிகுண்டுகளை செய்துள்ளார். இதில் 2 வெடிகுண்டுகளை அங்கேயே வெடித்து சோதனை செய்துள்ளார்.
மற்றொரு வெடிகுண்டை தான் செல்வா எடுத்து வந்து பாரின் மீது வீசினார். வெடிகுண்டு தயாரிக்கும் வேலையில் செல்வா உட்பட 7 பேர் ஈடுபட்டனர் உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது. தற்போது போலீசார் 4 பேரை பிடித்துள்ள நிலையில் மற்ற 3 பேரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செல்வா மீது ஏற்கனவே வழிப்பறி, மாமுல் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளும், விக்கி மீது கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.