தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தரமற்ற பணிகளால் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு விரும்பி செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, தொலைநோக்கி மூலம் கர்நாடக மாநிலம், கோவை மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற சமவெளிப் பகுதிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், தொட்டபெட்டா செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இச்சாலை சீரமைக்கப்பட்டது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரமற்ற வேலையால் மீண்டும் தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அங்கு வசிக்கும் மக்கள் மருத்துவ அவசியத்திற்கு கூட கடும் அவதிப் பட்டு செல்கின்றன. ஆனால், இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் உள்ளதால் சாலையில் எந்நேரமும் நிழல் விழும் நிலையில், கண் துடைப்பிற்காக சீரமைக்கப்பட்ட இந்த சாலை மீண்டும் சில இடங்களில் பழுதடைந்துள்ளது.

சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடைக்காலம் விடுமுறை நாட்கள் ஆகும். இப்பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் எனவே கோடை காலம் தூங்குவதற்கு முன்பு இச்சாலையை மீண்டும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.