- அமைச்சர் உதயநிதியை வரவேற்க வைத்த மைக் செட்டை நிறுத்த சொல்லி மைக் செட் அமைப்பாளரை காவல் துறையினர் கைது செய்ததால் அவரை விடுவிக்க கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் 26ம் தேதி நடைபெறுகிற குடந்தை கோட்டம் திறப்பு விழாவிற்காக அமைச்சர் உதயநிதி சாலை மார்க்கமாக தஞ்சை வழியாக கும்பகோணம் சென்றார்.
தஞ்சை நகர எல்லையான தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம் அருகில் அமைச்சர் உதயநிதிக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.இதற்காக மேடை மற்றும் மைக் செட் அமைக்கப்பட்டு இருந்தது.
உதயநிதி சென்ற சிறிது நேரம் கழித்து மைக் செட்டில் திமுக பிரச்சார பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.அப்போது அங்கு வந்த வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் மைக் செட் அமைப்பாளரான புருஷோத்தமனை கைது செய்யுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்
அவரது உத்தரவின்பேரில் புருஷோத்தமனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர் காவல்துறையினர்.இந்த தகவல் அறிந்து அங்கு கூடிய திமுகவினர் மைக்செட் அமைப்பாளர் புருஷோத்தமனை விடுவிக்க கோரி காவல்துறையினரிடம் கேட்டனர்.
இதனால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.