விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய கூட்டம் ராஜஸ்தானில் நடந்து முடிந்தது. அதன்பின் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் மேம்பாட்டுக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவெளியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாநில கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிய பின்னரும், 500 முதல் 1000 பேர் அமர்வதற்கான இடவசதி இல்லை, போதுமான வாகனங்கள் நிறுத்த வசதி இல்லை என்ற காரணங்களுக்காக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. காவல்துறையின் உத்தரவை ரத்து செய்து மாநில கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளர் மீனாட்சி சுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அனைத்து கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில், மிகவும் சிறிய அளவிலான மைதானத்தில் ஆயிரம் பேர் வரை அனுமதிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமென்று நிபந்தனை விதித்த நீதிபதி, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.