சென்னையில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிறகு ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டி; திருச்சி வந்த பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். அதன்படி வரவேற்பதற்கும், அனுப்பி வைப்பதற்கும் வாய்ப்பு தந்தார்கள். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க வாய்ப்புகள் வரும் போது உறுதியாக டெல்லி செல்வேன். மேலும் பொதுவாக நான் பிரதமரை சந்திக்கும் போது வாழ்த்து கடிதங்கள் கொடுப்பேன். அதன்படி நேற்று முன் தினம் பிரதமர் மோடியை சந்தித்த போதும் வாழ்த்து கடிதம் கொடுத்தேன். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் வரை எங்களது சட்ட போராட்டம் தொடரும்.

அதனை தொடர்ந்து சசிகலா விரும்பினால் உறுதியாக அவரை சந்திப்பேன். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பாஜவுடனும் இணைந்து பணியாற்றுவதற்கான நல்ல சூழல் இருக்கிறது. இந்த நிமிடம் வரை பாஜவுடன் தொடர்பில் இருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மக்களுக்கு கடுமையான வெறுப்பு இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு கட்சி பணத்தில் இருந்து ரூ. 2 கோடி கடன் கொடுக்கப்பட்டதா என்று கேட்கிறீர்கள். கட்சி நிதியில் இருந்து ரூ. 2 கோடி பணம் கொடுங்கள், ஒரு வருடத்தில் தந்து விடுகிறேன் என்று ஜெயலலிதா என்னிடம் கேட்டார். நான் காசோலை மூலமாக ரூ. 2 கோடி கொடுத்தேன். அந்த பணத்தை ஜெயலலிதா காசோலையாக திருப்பி கொடுத்துவிட்டார். நான் பொருளாளராக இருந்த போது பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யும் போது இதனை தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது, தலைமை செயலகத்தில் அவருடைய அறைக்கு சென்று, ஆட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் என்று கூறினேன். ஆனால், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.