கோவை மாவட்டத்தில் செல்வபுரம் பகுதியில் உள்ள அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு. கோவை மாநகராட்சி பகுதியான செட்டி வீதி – செல்வபுரம் இடையே உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை மாநகரம், புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களில் நீர் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம், செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் மழைநீர் வடிகால் வழிந்து சாலையில் மழைநீர் ஓடி வருகிறது. இந்த பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி, மழைநீர் வடிகாலில் நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும், செட்டி வீதி அசோக் நகர் பகுதிகளில் வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து புகுந்துள்ளது.

கோவையில் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது. மேலும், கடந்த ஒரு வாரமாகவே கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் குடியிருப்பு வாசிகள்.

கோவை மாநகராட்சி பகுதியிலேயே இந்த நிலை என்பது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. மழை தொடரும் பட்சத்தில் இந்த குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

இந்நிலையில், இந்த பகுதியில் மழை பாதிப்புகள் தொடர்பாக வடக்கு எம்.எல்.,ஏ., அம்மன் அர்ஜூனன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் , மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையாளர், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.