துனிசில்: வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். துனிசியாவில் பல்வேறு பேரிடர் தொடர்பான பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். கல்வி சீர்திருத்த பணிகளில் முக்கிய பங்காற்றினார்.
அவர் துனிசியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று அரசை வழி நடத்தி வந்தார். இந்த நிலையில் நஜ்லா பவுடனை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிபர் கைஸ் சையத் திடீரென்று அறிவித்தார். நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து துனிசியாவின் புதிய பிரதமராக அக்மத் ஹச்சானியை அதிபர் நியமித்தார்.
அக்மத் ஹச்சானி, துனிசியா மத்திய வங்கியில் பணிபுரிந்து வந்தார். துனிஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் ஆவார். அவர் அதிபர் முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிபர் தனது அதிகார வரம்பை கூடுதலாக நீட்டித்து கொண்டதன் மூலம் அப்போதைய பிரதமரை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தையும் கலைத்து உத்தரவிட்டார். அதன்பின் 2½ மாதங்களுக்கு பிறகு நஜ்லா பவுடனை பிரதமராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு திருத்திய அரசியலமைப்பு மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. மேலும் அதிபருக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே சுமார் 1¾ ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்த நஜ்லா பவுடன் திடீரென்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக வெளி விவகார மந்திரி உள்பட பல மந்திரிகளை காரணம் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்து அதிபர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.