திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்ற தந்தை அண்ணன்கள்! ஊராட்சி மன்ற தலைவர் மீது பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார். புகாரின் பேரில் அம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு. இளைஞரின் கிராமத்தில் போலீஸ் குவிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாகு வயது (21). இவர் பட்டியலின இளைஞரான இவரை அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த நர்மதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி தியாகு மற்றும் நர்மதாவை அம்பலூர் காவல்துறையினர் வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பெண்ணின் விருப்பபடி நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து தியாகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தனது மனைவியுடன் வெளியூரில் தங்கியிருந்த நிலையில் தியாகுவிற்கு பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அண்ணன்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தியாகு தனது சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிற்கு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தியாகு வீட்டிற்கு வந்திருப்பதையறிந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று தியாகுவின் வீட்டிற்கு காரில் வந்து தியாகு மற்றும் அவரின் பெற்றோரை தாக்கி நர்மதாவை அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் தியாகு தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன் அண்ணன்கள் கோவிந்தராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் கடத்தி சென்றதாக கூறி அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது புகாரின் அடிப்படையில் நர்மதாவை கடத்தி சென்ற அவரது தந்தை மற்றும் அண்ணன்கள் என 5 பேர் மீது அம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நர்மதா மற்றும் அவரது பெற்றோர் அண்ணன்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் கடத்தி சென்றதால் சங்கராபுரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.