தூத்துக்குடி, நெல்லையில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு..!

3 Min Read

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3,4 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பியது. வெள்ள நிவாரண நிதியாக சுமார் 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளது. அவர்களுக்கு வேண்டிய உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. புயல் மழை பாதிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு அவசர நிதியாக ரூபாய் 2000 கோடி வழங்க வேண்டும். அதேபோன்று மிக்ஜம் புயலால் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிக்காக ரூபாய் 12659 கோடி வழங்க வேண்டும்.

- Advertisement -
Ad imageAd image
முதல்வர் மு.க ஸ்டாலின்

தற்போது வட தமிழகம், தென்தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து, அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். டெல்லி சென்று சென்னை திரும்பிய முதல்வர் மு.க ஸ்டாலின் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10:15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிடுகிறார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் முதல்வர் வழங்குகிறார். தூத்துக்குடி மாவட்டம், மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். மேலும் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது. அதை விரிவாக சரி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அப்போது ஆலோசனை நடத்துகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளையும் அறிவிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

Share This Article
Leave a review