பங்காரு அடிகளார் உயிரிழந்தார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு வயது 82. மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை, பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் மறைவு செய்தி அறிந்த அவரது பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 9 மணி முதல் பொதுமக்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கன்ணீர் மல்க பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் நேரில் அஞ்சலி
இதற்கிடையே மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.
இறுதி ஊர்வலம்
தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல் அவரது வீட்டில் இருந்து 600 மீட்டர் தூரத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழிநெடுக இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ”ஓம் சக்தி பரா சக்தி” என்ற முழக்கத்துடன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் ஏந்தியும், தேங்காய், பூசணிக்காய் உடைத்தும் பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரசு மறியாதை
இதனை தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சக்தி பீடத்தின் அருகில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோயில் அருகே உள்ள புற்று மண்டபத்தில் ஆயிரம் கிலோ உப்பு, ஆயிரம் கிலோ வில்வ இலையுடன் சித்தர் முறைப்படி அமரவைத்து பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.3000 ததிற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.