கே.வி.குப்பம் அருகே கல்குவாரி குட்டையில் திமுக பிரமுகரின் உடல் பிணமாக மீட்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அடுத்த கே.வி.குப்பம் அருகே ஆலங்கனேரி சின்னமலை சிங்கார வேலன் மலை கோவில் மலையடிவாரத்தில் செம்பட்டரை கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. இதில் தண்ணீர் எப்போதும் நிரம்பியே காணப்படும்.

இந்த நிலையில் இன்று அந்த கல்குவாரி குட்டையில் வாலிபர் உடல் சடலமாக மிதப்பதாக கே.வி.குப்பம் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலிசார் காட்பாடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டனர்.

அப்போது மீட்கப்பட்ட வாலிபரின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ராஜாபாளாயம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் சுபாஷ் (26) என்பதும், இவர் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருவதும், மேலும் இவர் அப்பகுதி திமுக கட்சியின் நிர்வாகி என்பதும் தெரியவந்தது.

மேலும் கே.வி.குப்பம் போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, வாலிபர் சுபாஷை யாரேனும் கொலை செய்து கல்குவாரியில் வீசினார்களா அல்லது தவறி விழுந்தாரா? இல்லை வேறதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்குவாரி குட்டையில் திமுக பிரமுகர் உடல் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.