பஸ்களில் இலவசம் எனக்கூறி பெண்களே ஏமாற்றியதுதான் திராவிடம் மாடல் ஆட்சியின் தந்திர மாடல் ஆட்சி என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பல்வேறு பகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது எடப்பாடியில் நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதியில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் காய்ச்சல் பாதிப்பும், சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் தவறான தகவல்களை கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

நகர்ப்புற பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் அவர்களின் ஜாதி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்டு பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. அப்படி பெறப்படும் விவரங்களால் எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பாக அமையும். இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு முதல்வர் கர்நாடகா அரசை வலியுறுத்தியிருந்தால் குறைந்த பட்சம் பத்து டி.எம்.சி தண்ணீரையாவது தமிழகத்துக்கு பெற்று தந்து இருக்க முடியும்.
டெல்டா காரர் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சருக்கு விவசாயிகள் நலனின் அக்கறை இல்லை. தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருகி இருந்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு மின்கட்டணம் உயர்வுகளால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் இல்லாமல் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மகளிர் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றார்கள்.

தற்போது சில பஸ்களில் மட்டும்தான் இலவச பயணம் மற்ற பஸ்களில் ஏறினால் மகளிர் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இப்படி தான் திராவிடம் மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சியை திமுக செய்து வருகிறது. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.