பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் கோபாலி சௌக்கில் இயங்கி வந்த பிரபல தனியார் தனிஷ்க் நகைக்கடையில் இருந்து, துப்பாக்கி ஏந்திய குற்றவாளிகள் கும்பல் ஒன்று, பல கோடி மதிப்புள்ள நகைகளைத் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பட்ட பகலில் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருக்கும் நகைக் கடையில் முகமூடி எதுவும் பயன்படுத்தாமல் துப்பாக்கி ஏந்திய ஆறு முதல் ஏழு நபர்களை உள்ளடக்கிய கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பகல் 10 மணியளவில் நகரத்தின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நகைக்கடைக்குள் இருந்ததாகவும் , அந்த நேரத்தில் கொள்ளையர்கள் எந்த பதற்றமும் அடையாமல் நிதானமாக செயல்பட்டது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக நகைக்கடையின் ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் .
கொள்ளை கும்பல் தப்பிச் செல்வதற்கு முன்பு பாதுகாப்புக் காவலரின் துப்பாக்கியையும் முன்னெச்சரிக்கையாக திருடிச் சென்றுள்ளனர் .
இந்நிலையில் கொள்ளைக்கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக பீகார் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர் . இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் இருவரை பர்ஹாரா காவல் நிலைய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையர்கள் , இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து இரு பைகள் நிறைய நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது . மேலும் தப்பி சென்ற நான்கு கொள்ளையர்களை தேட தனிப்படை அமைத்து பீகார் மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் .
இந்த துணிகர கொள்ளை சம்பவம் உள்ளூர் வியாபாரிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளநிலையில் , தப்பிய மற்ற குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக போஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஜ் தெரிவித்தார்.
கொள்ளையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த கொள்ளையானது சமீபத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளைகளில் ஒன்றாகும்.
திருடப்பட்ட பொருட்களை திரும்பப் பெறவும், மற்ற குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.