உத்தரகாசி சுரங்கப் பாதை மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து மக்களின் உணர்வுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வணக்கம் தெரிவித்துள்ளார்.
உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் நமது தொழிலாளர் சகோதரர்களின் வெற்றி அனைவருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று திரு. மோடி கூறினார். சுரங்கத்தில் சிக்கியவர்களின் தைரியம் மற்றும் பொறுமையைப் பாராட்டி, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதாபிமானம் மற்றும் கூட்டுப்பணிக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு என்று பிரதமர் மேலும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது, “உத்தரகாசியில் உள்ள நமது கூலித்தொழிலாளி சகோதரர்களின் மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
சுரங்கப்பாதையில் சிக்கிய ஊழியர்களின் தைரியமும் பொறுமையும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று நான் சொல்ல விரும்புகிறேன். அனைவரின் நல்வாழ்விற்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நம் தோழர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த சவாலான நேரத்தில் அவர்கள் அனைவரின் குடும்பத்தினரும் காட்டிய பொறுமையும் தைரியமும் பாராட்டுக்குரியது.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் உணர்வுக்கும் தலைவணங்குகிறேன். அவர்களின் வீரமும் உறுதியும் நம் கூலித்தொழிலாளி சகோதரர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் கூட்டுப்பணிக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு.” என்றார்.