விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் சினேகா (17). இவரது தந்தை, தாய் இருவரும் போபாலில் இருந்து வந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தாய் விபத்து ஒன்றில் இறந்து விட்டார்.
இதனால் சினேகா கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் வசித்து வரும் தனது பெரிய தந்தையின் மகளான ஞானஜோதி (34) வீட்டில் தங்கிக் கொண்டு விருத்தாசலம் அரசு பெண் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது நடந்த பொதுத்தேர்வில், தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்த அவர், சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது.
இதனால் தேர்வில் குறைவான மதிப்பெண் வரும் என நினைத்து மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்று, விவசாய நிலத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கார்மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது சகோதரி ஞானஜோதி கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்..
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104