ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இது மட்டுமல்லாது இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டிருப்பதாகவும் பாராட்டு தெரிவித்திருக்கிறது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. அப்போது மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்ததது. இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தை சரமாரியாக சாடியுள்ளது.
அதாவது, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என கூறியிருந்தது.
இதனை அடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, “ஆலை கடந்த காலங்களில் ஏராளமான விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. காப்பர் கழிவுகளை பொது வெளியில் விட்டு கடும் மாசை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது.

மட்டுமல்லாது இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் விசாரித்ததில் எந்த வரம்பு மீறலும் இல்லை. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது சரியானது தான்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்று கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டம் 100-வது நாளை எட்டிய நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்னே பெருமளவு மக்கள் திரண்டு ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தமிழக அரசின் உத்தரவை மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், இதனை எதிர்த்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில், இந்தியாவின் காப்பர் உற்பத்தி குறித்து பேசிய வேதாந்தா நிறுவனம், ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற வரம்பிற்குள் இந்த வழக்கு வராது என்பதால், தமிழ அரசின் உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில், ஆலை மாசு ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்கள் கண்டறிந்தன.
ஜிப்சம், தாமிரக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தவறான தகவல்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே ஆலையை இயங்க அனுமதிக்க கூடாது. ஏற்கனவே விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் ஆலை நிர்வாகம் மதிக்கவில்லை.

எனவே மறுபடியும் நிபந்தனை விதித்தாலும், அதை பின்பற்றுவார்கள் என எப்படி நம்ப முடியும்? ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றியுள்ள நிலத்தடி நீரை கடுமையாக மாசடைய வைத்துள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்ற நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையிலேயே ஆலை இயங்க கூடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது” என்று தெளிவாக எடுத்துரைத்தது. இதனையடுத்து, ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.