வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூர் பகுதியில் வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி

2 Min Read
அன்புமணி

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூர் பகுதியில் வேறு இடத்தில் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய பார்வதிபுரம் மக்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக்கூடாது என்றும், அம்மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களின் விருப்பமும் இதுவாகவே உள்ளது. பன்னாட்டு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்ட போதிலும், பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் தமிழக அரசு தன்னிச்சையாக கட்டுமானப் பணிகளை தொடங்கியது நியாயமல்ல. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தவறு.

அன்புமணி ராமதாஸ்.

பன்னாட்டு மையம் அமைக்கப்படவுள்ள பெருவெளி உள்ளிட்ட சத்தியஞான சபை வளாகம் அமைந்துள்ள நிலம் முழுவதும் பார்வதிபுரம் மக்களால் கொடையாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தை வள்ளலாருக்கு மக்கள் கொடையாக வழங்கியதன் நோக்கம் அவர்களுக்கு தெரியும். அந்த நோக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்வதிபுரம் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களின் உணர்வுகளை மதித்து கோரிக்கையை நிறைவேற்றாமல் அவர்களை கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; கண்டிப்பாக வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.

பார்வதி புரம் மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூர் பகுதியில் வேறு இடத்தில் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review