Vellore : தப்பிச்சென்ற சிறார் குற்றவாளி கைது , 5 பேருக்கு வலை

2 Min Read
அரசினர் பாதுகாப்பு இல்லம்

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து காவலாளிகளை தாக்கிவிட்டு தப்பியோடிய ஆறு சிறார்களில் ஒருவன் சென்னையில் கைது . மீதமுள்ள 5 நபர்களை கைது செய்ய போலீசார் தீவிரம்.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் ஆட்சியர் அலுவலகம் , காகிதப்பட்டறை , அருகேயுள்ள ஆற்காடு சாலையோரம் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இதன் கண்காணிப்பாளராக விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு இல்லத்தில் திருட்டு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சென்னையை சேர்ந்த சிறுவன் கடந்த 25-ந் தேதி தன்னை வேறு இல்லத்துக்கு மாற்றக்கூடாது என்று கூறி கட்டிடத்தின் மேலே ஏறி ரகளையில் ஈடுபட்டான்.

மேலும் அங்குள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., மின்விளக்குகளை கம்பால் அடித்து உடைத்து பரபரப்பை ஏற்படுத்தினான் . இளஞ்சிறார் நீதித்துறை நீதிக்குழும நீதிபதி பத்மகுமாரி சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவன் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். இதுதொடர்பாக பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் மற்றும் சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் வழக்கம்போல் இல்ல பாதுகாப்பு பணியில் குமரவேலு, பிரபு உள்பட 3 காவலாளிகள் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட சென்னை சிறுவன் உள்பட 6 பேர் அறையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் திடீரென கை மற்றும் கட்டையால் சரமாரியாக ஒரு காவலாளியை தாக்கினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற 2 காவலாளிகளும் அங்கு விரைந்து சென்றனர். அவர்களையும் 6 பேரும் சரமாரியாக தாக்கி விட்டு பின்பக்க சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பியோடினர். இதில், காயமடைந்த காவலாளிகள் இச்சம்பவம் குறித்து  இல்ல கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும்  வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு செல்போனில் புகார் தெரிவித்தனர் . அதைத்தொடர்ந்து போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , தப்பியோடிய ஆறு சிறார்களில்  ஒருவனை , தனிப்படை காவல்துறை சென்னை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர் . நேற்று இரவு சிறுவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் , இன்று அவனை , வேலூர் காகிதப்பட்டறையில் இயங்கி வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்குப் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட உள்ளனர் . மீதமுள்ள 5 சிறுவர்களையும் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என மாவட்ட காவல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது .

Share This Article
Leave a review