பாலியல் புகாரில் சிக்கிய அடையாறு காலஷேத்ரா கல்லூரி ஏப்.6-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. கல்லூரி வி டுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இப்புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து இக்கல்லூரியில் விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி, தன்னைப்பற்றி பொய்யாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாகவும், அப்படி செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் திடீரென தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரை திரும்பப்பெற்றது.அப்படிப்பட்ட சூழலில் கலாஷேத்ராவில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்றுமுன்தினம் மாணவ, மாணவியர்களிடம் மூன்று மணி்நேரம் ரகசியமாக விசாரணை நடத்தினார். புகாரை வாபஸ் பெற்றபின் தேசிய மகளிர் ஆணைய தலைவி எப்படி விசாரணை நடத்தினார் என்று மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது
இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் ஹரி பத்மன், அலுவலர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலாஷேத்ராவில் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவிகள் பலருக்கு ஆசிரியர் ஹரிபத்மன் பல வருடங்களாக தொல்லை கொடுத்து வருவதாகவும், பலர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் உள்ள கமிட்டிக்கு புகார் அனுப்பியதாகவும் கூறினர். ஆனால்,அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், புகார் கொடுக்க முன்வருபவர்களை மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வைத்து மிரட்டுவதாக மாணவிகள் குற்றம்சாட்டினர். அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கக்கூடிய ஆண் மாணவர்களுக்கும் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அதிர்ச்சி தகவல்களை மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கலாஷேத்ரா நிர்வாகத்தில் மாணவ மாணவியரிடையே கடுமையான சாதியப் பாகுபாடு கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளனர். நேற்று தொடங்கிய போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கல்லூரியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், மத்திய கலாச்சார அமைச்சகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கல்லூரியை ஏப். 6-ம் தேதி வரை மூட கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்கு காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.