மார்கழி மாத ஸ்பெஷல் : கலர் கோலமாவை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள்..!

2 Min Read

திண்டிவனம் மாவட்டத்தில் கலர் கோலமாவு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் பிறந்தாலே பெண்கள் காலையில் எழுந்து வாசலில் நீர் தெளித்து அழகான கோலம் இடுவது வழக்கம்.

- Advertisement -
Ad imageAd image

மார்கழி மாதம் பிறந்தாலே பெண்கள் இன்னும் சிலர் தாங்கள் இட்ட கோலத்தில் நடுவே அழகான கலர் கோலமாவால் அழகு படுத்துவார்கள். வீட்டு வாசலில் கோலம் இடுவது தமிழர்களின் பாரம்பரிய பழக்க வழக்கம் ஆகும். குறிப்பாக, மார்கழி மாதத்தில் வீட்டின் வாசலில் அதிகாலையில் பெண்கள் கோலம் இடுவர். தற்போது புள்ளி, டிசைன், ரங்கோலி என பல வடிவங்களில் கோலமிட்டு அதில் கலர் கோலமாவுகளை பயன்படுத்தி வண்ணமிடுகின்றனர். இதனால் மார்கழி மாதத்தில் அதிக அளவு கோலம் விற்பனை நடைபெறும். திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் செஞ்சி சாலையில் அமைந்துள்ள இருதயபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்கள் அனைவரும் கலர் கோலமாவு தயாரிக்கும் தொழிலை முதன்மையாக கொண்டுள்ளனர்.

கலர் கோலமாவு விற்பனை

இதற்காக அவர்கள் அருகில் உள்ள வயல் பகுதிகளில் கிடைக்கும் உலர் மண்ணை சிறிது சிறிதாக சேகரித்து வைத்துக்கொண்டு உலர் மண்ணில் கலக்கப் பயன்படும் தேவையான கலர் பவுடர்களை சென்னையிலிருந்து வாங்கி வந்து உலர் மண்ணுடன் தேவையான அளவு கலந்து பல வகையான கலர் கோலமாவு தயாரிக்கின்றனர். இதனை அவரவர் வசதிக்கேற்ப வாகனங்களில் தமிழகம் மற்றும் புதுவைக்கு எடுத்துச் சென்று ஒரு படி 40 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தங்களது வீடுகளுக்கு அருகிலேயும், சாலை ஓரத்தின் இருபுறமும் கடை அமைத்து கலர் கோலமாவு விற்பனை செய்கின்றனர். மார்கழி மாதத்தில் கோவில் வழிபாடுகள் சிறப்பு பூஜைகள் இருப்பதாலும், அதிகாலையில் பெண்கள் அனைவரும் வீட்டில் கோலம் இடுவது வழக்கம் என்பதாலும் கலர் கோலமாவு நன்கு விற்பனை ஆகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

வீட்டு வாசலில் கலர் கோலம்

இதனை சென்னை, திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளும் மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் வாகனத்தை நிறுத்தி கலர் கோலமாவை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் மார்கழி மாதம் தொடங்கி மூன்று நாட்களே ஆன நிலையில், இருதயபுரம் பகுதியில் கலர் கோலமாவு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், கலர் கோலமாவு விற்பனை படுஜோராக நடைபெறும் எனவும், கோலமாவு விற்பனையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a review