நாடாளுமன்ற தேர்தல் நெருங்க,நெருங்க அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது தமிழ்நாட்டில்.இன்னமும் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன நடக்குமோ என்று இருக்கும் நிலையில். மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடித்து கவனம் பெற்றவர் பாஜகவின் சரஸ்வதி. இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து திமுகவில் இருந்தும் தீவிர அரசியலில் இருந்துமே சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிக் கொண்டுவிட்டார்.

பாஜக- அதிமுக கூட்டணி;
இந்த நிலையில் பாஜக- அதிமுக கூட்டணி இருந்த நிலையில் ஈரோடு லோக்சபா தொகுதியை மருமகன் அசோக்குமாருக்கு பெற்றுத் தர வேண்டும் என்பதில் எம்.எல்.ஏ. சரஸ்வதி முயற்சித்து வந்தார் என்பது பொதுவான பேச்சாக இருந்தது. மருமகன் அசோக்குமார், பாஜகவில் ஓபிசி அணி துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.
அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு;
இந்த பின்னணியில் இன்று அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை சரஸ்வதியின் மருமகன் அசோக இன்று நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனான கருத்து வேறுபாட்டால் தாம் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவதாக அசோக் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் பவுண்டேஷன்;
ஆற்றல் அசோக் குமார்’ என அழைக்கப்படுகிறவர்தான் அசோக். ஆற்றல் என்ற பெயரில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா புதுப்பாளையத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் பேராசிரியர்கள். தாயார் கே.எஸ். சவுந்தரம் அன்றைய திருச்செங்கோடு (இன்றைய ஈரோடு) லோக்சபா தொகுதியில் 1991-ல் எம்.பி.யாக வென்றவர். மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான கருணாம்பிகா குமாரை திருமணம் செய்துள்ளார் ஆற்றல் அசோக்.
ஆற்றல் அசோக் குமார் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட், இன்டல், ஜெராக் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். 2021-ம் ஆண்டு முதல் ஆற்றல் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். டிப்ஸ் கலை அறிவியல் கல்லூரி, டிப்ஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், டிப்ஸ் ஸ்கூல் ஆப் ஆர்கிடெச்சர், தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட், தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் ஆற்றல் அசோக்.