
பாம்பு கார்த்திக்
மிகப்பெரிய அளவில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர் திமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என்றும், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக வாங்கி கடத்துவதாகவும், இதனை தட்டிக்கேட்டே வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், பெட்ரோல் குண்டு தாக்குதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கார்த்திக் என்பவர் திமுக இளைஞரணி பொறுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர். திமுக தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் இந்த பாம்பு கார்த்திக், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதனைத் தட்டிக் கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது. கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும், மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தப் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தைக் காட்டுகிறது. ஆளுங்கட்சி என்பதால், காவல்துறையினரோ, தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ரேஷன் அரிசி கடத்தும் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும்போது, திமுகவினர் ரேஷன் அரிசியைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொடுப்பது கீழ்த்தரமானது. ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும். உடனடியாக, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.