தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,தமிழ்நாடு கவர்நரையும், பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, தன்னை விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து குஷ்பு குறித்து அவதூறு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் அறிவித்தார்.
இதற்கிடையே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, பாஜக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத், சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுதொடர்பான வீடியோக்களை இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.