தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயரதிகாரிகளும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அதிகாரிகள் முன்னிலையில் முதலீடுகளுக்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதே போன்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டிடம் மற்றும் சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளைஞர்களுக்கு தெரிவு செய்ய்ப்பட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, நில வங்கிகள் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடன் கூடிய முதலீட்டுத் தளமாக தமிழ்நாடு விளங்குவதை நிகழ்வில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவர்களை அழைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.