கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் இறந்த மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.
காந்திதம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பகுதியாக வந்த போது தண்டவாளத்தில் இருந்த பாறைகள் மீது பலத்த சத்தத்துடன் மோதிய நிலையில் சுதாரித்து கொண்டு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அருகில் உள்ள கேட் கீப்பரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில் வழித்தடம் உள்ளது.
இந்த நிலையில் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த காந்திதாம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பார்வதிபுரம் பகுதியில் வரும் போது தண்டவாளத்தில் அடுத்தடுத்து பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்ததை லோகோ பைலட் பார்த்துள்ளார்.

அப்போது ரயில் வேகம் குறைக்கப்பட்ட நிலையில் பலத்த சத்தத்துடன் கல் மீது ரயில் மோதி உள்ளது. அதனை தொடர்ந்து ரயில் பார்வதிபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பரிடம் சம்பவம் குறித்து லோகோ பைலட் கூறியுள்ளார்.
மேலும் ரயில்வே நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் அடுத்தடுத்து பெரிய பாறாங்கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு மற்றும் எலும்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பவ இடம் வந்த குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விசாரணையை மேற்கொண்டார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த சில இளைஞர்கள் அந்த பகுதி வழியாக வேகமாக சென்றதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அருகாமையில் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து சதி திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது எதற்காக இதனை செய்தார்கள் என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.