புதிய தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்ததாக குற்றம்சாட்டிய நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூசன் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்க கூடாது என்று சாக்ஷி மாலிக் பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குரை சந்தித்து வலியுறுத்தினர். இது என்றாலும் பிரிஜ் பூசன் விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் போராட்டத்தை முன்னின்றி நடத்தியவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். நிருபர்களை சந்தித்து பேசிய போது;

கண்ணீர் விட்டு அவர் இனிய மல்யுத்தம் களத்திற்கு வரப்போவதில்லை என்பதற்காக தனது ஷூவை தூக்கி காண்பித்தார். தழுதழுத்த குறலில் பேசிய சாக்ஷி மாலிக் நீதிக்காக நாங்கள் உணர்வுபூர்வமாக முழுமூச்சுடன் போராடினோம். ஆனால் கடைசியில் பிரிஜ் பூசனின் தொழில் பார்ட்னர் அவரது நெருங்கிய கூட்டாளியே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இனி எப்படி மல்யுத்த களத்தில் நீடிக்க முடியும். இத்துடன் மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுகிறேன். இந்த நிமிடத்தில் இருந்து நீங்கள் என்னை மல்யுத்த களத்தில் பார்க்க முடியாது. தலைவராக ஒரு பெண் வர வேண்டும் என்று விரும்பினோம். ஒரு பெண் தலைவர் ஆகி இருந்தால் வீராங்கனைகளின் நலன் பாதுகாக்கப்படும். ஆனால் நாங்கள் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. தற்போதைய புதிய நிர்வாகிகள் அமைப்பில் ஒரு பெண் கூட இல்லை என்றார். அரியானாவைச் சேர்ந்த 31 வயதான சாக்ஷி மாலிக் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர் காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கமும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கமும் வென்றுள்ளார். போட்டியின் போது உடன் இருந்த ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் பூனியா கூறுகையில் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூசன் ஆதரவாளர்களோ அல்லது குடும்பத்தினரோ போட்டியிட மாட்டார்கள்.

எங்களிடம் அளித்த வாக்குறுதிபடி மத்திய விளையாட்டு துறை மந்திரி நடந்து கொள்ளாதது துரதிஷ்டவசமானது. சஞ்சய் சிங் தலைவராகி இருப்பதன் மூலம் மல்யுத்த வீரங்கனைக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. நான் தொடர்ந்து மல்யுத்த போட்டியில் விளையாடுவெனா என்பதே உறுதியாக சொல்ல முடியாது என்றார். காமன் வெல்த் விளையாட்டு சேம்பியன் வினேஷ் போகத் கூறுகையில் சஞ்சய் சிங் போன்றவர்கள் மல்யுத்த அமைப்பில் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் தலைவராகி இருப்பதன் மூலம் அடுத்த தலைமுறை மல்யுத்த வீராங்கனைகளும் இதே போன்ற தொந்தரவுக்கு உள்ளாக கூடும். இந்த விவகாரத்தில் திரை மறைவுக்கு பின்னால் என்ன நடந்தது என்பது இப்போது தெரிந்து விட்டது எப்படி நீதியை நிலை நாட்டுவது என்பது எனக்கு தெரியவில்லை. நாட்டில் மல்யுத்தத்தின் எதிர்காலம் இருளாகி விட்டது போல் தோன்றுகிறது, என்று குறிப்பிட்டார்.