விடுதியில் தங்க வைத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:தமிழ் ஆசிரியர் “போக்சோ” வில் கைது..!

2 Min Read
reprenstive image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருவக்கரை மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 350 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர்.
இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மகளை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகத்திற்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச வீடியோவை பார்க்குமாறு திருவக்கரை பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (வயது 38) வலியுறுத்தியதாகவும் தொடர்ந்து இதுபோல் தொல்லை அளித்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தாள்.மேலும் சில மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், அவரது கணவர் மற்றும் உறவினரிடம் தெரிவித்தார்.

மாதிரி படம்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் பள்ளியில் பரவியதை அடுத்து தமிழ் ஆசிரியரின் லீலைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மேலும் சிலர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த மாணவிகளின் உறவினர்கள் பள்ளியில் இருந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை வானுர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மகேஸ்வரன் விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம், வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் கடந்த ஆண்டு தான் திருவக்கரை பள்ளியில் பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் சென்று மாணவிகளுக்கு மகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மகேஸ்வரன் மீது 7 மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் இந்த வழக்கு கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் தலைமையிலான போலீசார் ஆசிரியர் மகேஸ்வரனை போக்சோவில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலில் தொல்லை கொடுத்த தகவல் பரவியதை அடுத்து மாணவ,மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article
1 Review