கோவையில் ராக்கிங் செய்த ஏழு பேரை கைது செய்து போலிசார் விசாரணை – கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகர காவல் துணை ஆணையர்.
கோவை மாவட்டத்தில், அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயதான மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் அந்த மாணவர் தங்கி இருந்த ஹாஸ்டல் அறை எண் 225″க்கு சென்றுள்ளனர். அந்த மாணவரை சீனியர் மாணவர்கள் தங்கி இருக்கும் 401″வது எண் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவரை ஆபாசமாக திட்டி தாக்கியதுடன் மொட்டை அடித்தும் உதைத்தும் காலை 5.30 வரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 18″வயது மாணவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். திருப்பூரில் இருந்து வந்த பெற்றோர் மாணவரை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். பின்னர் தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அம்மாணவரை ராக்கிங் செய்து தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் தரணிதரன், வெங்கடேஷ் ஆகியோரையும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாதவன்,மணி ஆகியோரையும், நான்காம் ஆண்டு படிக்கும் ஐயப்பன், சந்தோஷ்,யாலிஷ் ஆகியோர் என 7 பேரை பீளமேடு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, கோவையில் ஏராளமான கல்லூரி இருக்கிறது. இங்கு ராக்கிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை எச்சரிக்கை அறிவுரை வழங்குகிறோம். வழக்கு பதிவு செய்வதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அதேபோல ஒருவர் மீது வழக்கு ஆகிவிட்டால் அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற முடியாது.
இதனால் கல்லூரி மாணவர்கள் ராக்கிங் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடுமையாக உள்ளது. அதனால் இதில் யாரும் ஈடுபட வேண்டாம் – மேலும் தற்போது மாணவர்கள் கைது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது என இவ்வாறு தெரிவித்தார்.