கோவையில் நடைபெறும் பிரதமரின் சாலை பேரணிக்கு வருகை தந்த பாஜகவினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து செல்ஃபிக்கள் எடுத்துக்கொண்ட நிலையில், நிர்வாகிகள் உடனடியாக வெள்ளைத்துண்டை மாற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இன்று நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பாஜகவினர் தற்போது கோவை மாநகரில் குவிந்து வருகின்றனர்.

அப்போது பேரணி துவங்க உள்ள பகுதியிலிருந்து ஆர்.எஸ்.புரம் வரையிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் குவிந்து வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்துவதற்காக பாஜகவினர் சார்பில் ஜமாப் இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் ஆணிக்காலணி அணிந்து சிவ பக்தர்கள் சிலர் குவிந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிரதமரின் நிகழ்ச்சிக்காக வருகை தந்த படுக இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாத்தியங்களை முழங்கியும், பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர்.
இந்த பேரணியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாஜகவின் துண்டுகளை தோளில் அணிந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளும் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவை புரூக்பாண்ட் சாலை செல்லும் பகுதியில் சிந்தாமணி அருகே திருவள்ளுவர் சிலை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த திருவள்ளுவர் சிலையின் அருகே குவிந்த ஏராளமான பாஜகவினர், சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர். அதை தொடர்ந்து அந்த சிலையுடன் அவர்கள் செல்ஃபிக்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதை கண்ட சில பாஜக நிர்வாகிகள், உடனடியாக அங்கு வந்து திருவள்ளுவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த காவி துண்டை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வெள்ளை நிற துண்டை போட்டுவிட்டு சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இதன்பின்னர் வந்தவர்கள் வெள்ளைத்துண்டு போடப்பட்ட திருவள்ளுவர் சிலையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.