டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சேலம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க
சேலம், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் டெண்டர் அறிவிப்பு ஒன்றை கடந்த ஜூலை 22ம் தேதி வெளியிட்டார்.
இந்த டெண்டரை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ண்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த டெண்டரில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி சேலம் பனைமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த அம்மன் மகளிர் சுய உதவி குழு அமைப்பின் உறுப்பினர் சுபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
அதில் சேலம் நரசிங்கபுரம் நகராட்சியில் கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024 ஜூன் வரை கொசு ஒழிப்பு பணிக்கான டெண்டரை எடுத்து அந்த பணியில் எந்த வித குறைப்பாடுகளும் இல்லாமல் தங்கள் அமைப்பு செயல்ப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டெண்டர் எடுக்க அனுமதிக்கப்படும் எனக்கூறி, டெண்டருக்கான விண்ணப்பம் கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதி வழங்க தொடங்கப்பட்டதாகவும், டெண்டருக்கு விண்ணப்பிக்க ஜூலை 29 ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நகராட்சி ஆணையரை அணுகிய போது, டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஜூலை 31ம் தேதியே முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முறையாக எந்த வித அறிவிப்பும் வழங்காமல், விதிகளை மீறி நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டர் அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் டெண்டருக்கான விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், டெண்டர் விண்ணபங்களை பெற்று விண்ணப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்காமல், 7 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் டெண்டருக்கான விவரங்களை நகராட்சி ஆணையர் அலுவலக தகவல் பலகையிலும் வெளியிடவில்லை என்பதால் தங்களால் டெண்டரில் பங்கேற்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/chennai-is-celebrating-its-385th-anniversary-today/
இதனை பதிவு செய்த நீதிபதி, கொசு ஒழிப்பு பணி ஒப்பந்த ஊழியர்கள் நியமிப்பதற்காக கடந்த ஜூலை 22 ம் தேதி நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் வெளியிடப்பட்ட ஆன்லைன் டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் டெண்டருக்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் உரிய கால அவகாசம் வழங்கி, புதிதாக டெண்டர் அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.