கிருஷ்ணகிரியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S. ரேவதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் உட்பட 41 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவியை என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மாணவி போலீசில் புகார் அளித்ததின் பேரில் ஆசிரியைகள், முதல்வர் மற்றும் தாளாளர் உள்ளிட்டோர் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது. மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S. ரேவதி , எழுதியுள்ள கடிதத்தில், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவராமனும் அவரது தந்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெரிய நபர்களை காப்பற்றவதற்காக சிவராமனும், அவரது தந்தையும் பலிகடா ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது போல கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாகவும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/krishnagiri-national-commission-for-women-notice-to-dgp-for-sexual-assault-incident/
மேலும், விசாரணை நியாயமாக நடைபெறுகிறதா? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.