தலையங்கம்
மது குடித்து உயிரிழந்து போனவர்கள், இன்னும் நோயாளிகளாக உள்ளவர்கள், பட்டியல் நீண்டு கொண்டே போகிறது மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பின்னர்.
இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலப் பட்டியலின் கீழ் வரக்கூடியது மது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மதுவை மருத்துவக் காரணங்களுக்காக இன்றி போதைக்காக பயன்படுத்துவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்டப் பிரிவு 47 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறது. என்றாலும், தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது
.
மது விற்கப்படும் மாநிலங்களில் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்தந்த மாநிலங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதில், விதிவிலக்காக குஜராத், நாகாலாந்து, மிசோரம், பிகார் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலர் அங்கு விற்கப்படும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களும் உண்டு. இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறவர்களும் உண்டு. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்குவது என தமிழக அரசு முடிவு எடுத்து வழங்கியும் வருகிறது. இதை ஆதரிக்கலாமா அல்லது வேண்டாமா என்கிற விவாதம் இப்போது பொது மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அரசாங்கம் ஒரு பக்கம் பாதுகாப்பான மது விற்பனை என்கிற பெயரில் டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்து வருகிறது. அதை மீறி இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் தொடர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கம். இதை கட்டுப்படுத்த தவறிய அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவது என்பது சிறந்த ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் அரசு உதவித்தொகை வழங்குவது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல. இது மேலும் மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் அரசு நிதி கொடுக்கும் என்கிற போக்கை ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்து விடும்.
அப்படியே நிதி கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் அரசும் அழுத்தமும் ஏற்படும் பட்சத்தில். அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளே. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து உதவித்தொகையை அரசு வழங்கலாம். இல்லையென்றால் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய அரசு எந்த கட்சியை சார்ந்திருக்கிறதோ அந்த கட்சியின் சொந்த நிதியிலிருந்து வழங்கலாம். இல்லையென்றால் கள்ளச்சாராயமும் பெருக்கெடுத்து ஓடும். பணத்திற்காக உயிர் இழப்புகளும் ஏற்படும்.
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்