கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த போச்சம்பள்ளியில் தருமபுரி சாலையில் பாஸ்கர் ஜூவல்லரி கடை இயங்கி வருகிறது. போச்சம்பள்ளி காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இந்த கடை அமையப்பெற்றுள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் உள்ள நகைக்கடையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கொள்ளையன் உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது காரில் வந்த கொள்ளையன் கோணனூர் ஏரிக்கரை பகுதியில் மறைவாக காரை நிறுத்தி விட்டு, பின்னர் காரிலிருந்த வெல்டிங் மெசினை எடுத்து கொண்டு, கடையின் பின்புற வழியில் வந்துள்ளான்.
பின்னர் நகைகடைக்கு அருகே புதியதாக கட்டுமானப்பணி நடைபெற்று வரும் கட்டிடத்தின் தற்காலிக மின் இணைப்பிலிருந்து மின் இணைப்பு எடுத்துக்கொண்டு நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் மூலம் ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டியுள்ளான்.

வெல்டிங் மெசின் வைத்து வெட்டிக்கொண்டிருந்த போது அருகே தனியார் வங்கியின் இரவு காவலர் நகைக்கடையின் முன்பகுதியில் வெளிச்சம் வருவதை கண்டு, போச்சம்பள்ளி காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
பணியிலிருந்த காவலர்களான மணி மற்றும் நேரு ஆகியோர் சற்றும் யோசிக்காமல் நிகழ்விடத்திற்கு சப்தமின்றி வந்து மறைவாக பார்த்துள்ளனர்.

அங்கு ஒருவர் வெல்டிங் மெசின் மூலம் சட்டரை உடைப்பதை கண்டு மற்ற காவலர்களுக்கும், கடையில் உரிமையாளர் கிருஷ்ணனுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள்ளாக கடையை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன் அலமாரியில் இருந்த நகைகள் சுமார் 100 சரவன் அளவுக்கு மூட்டை கட்டியுள்ளான்.
பின்னர் கடையில் இருந்த சாமி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை எடுத்து உள்ளாடையில் போட்டுள்ளான். அதற்குள்ளாக போச்சம்பள்ளி மற்றும் நாகரசம்பட்டி போலீசார் அங்கு குவியத்துங்கினர். பின்னர் உள்ளே இருக்கும் கொள்ளையனிடம் போலீசார் பேச்சுவாரத்தை கொடுத்தனர்.

அதிர்ந்து போன கொள்ளையன் கையிலிருந்து மூட்டையை கீழே போட்டு விட்டு, வேறுபக்கம் ஏதேனும் வழி உள்ளதா என தேடியுள்ளான். மொபைல் போன் மூலம் சிசிடிவி கேமராவை கண்காணித்துக்கொண்டு, மீண்டும் பேசிய போலீசார், வேறுபக்கம் ஏதும் வழி இல்லை.
ஷட்டர் வழியாக மட்டுமே வெளி வர முடியும் என்பதை கூறியுள்ளனர். கையிலிருக்கும் கொடையை மடித்துவைத்துவிட்டு, வெளியே வர கூறியுள்ளனர்.

கொடை பிடித்து தன்னை மறைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்த கொள்ளையன் செய்வதறியாது, வேறு வழியின்றி கொடையை கீழே போட்டு விட்டு, உடைத்த ஷட்டர் வழியே வெளியே வந்துள்ளார். அப்போது லாவகமாக அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பின்னர் விசாரித்த போது போச்சம்பள்ளி அடுத்துள்ள வீரமலை கிராமத்தை சேர்ந்த அம்மாசி மகன் கிரண்குமார் வயது (24) என்பது தெரியவந்தது.

இதை அடுத்து அவனது வீட்டிற்கு சென்ற காவலர்கள் அவனது வீட்டில் வைத்திருந்த 2 லேப்டாப், 3 வெல்டிங் மெசின், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்ட பொருட்களை கைபற்றியுள்ளனர்.
வடமாநில முக சாயலில் உள்ள இந்த நபர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை ஒரு திருட்டிலும் அகப்படாமல் சாதுர்யமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கொள்ளையனிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையன் படிபட்டதன் மூலம் 700 சவரன் தங்க நகைகள், 20 லட்சம் மதிப்பிலான டயமன் நகைகள், 100 கிலோ வெள்ளி பொருட்கள் என மொத்தம் சுமார் 5 கோடி மதிப்பிலான பொருட்கள் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையனை பிடிப்பதில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர் நேரு, தலைமை காவலர் மணி, உளவு பிரிவு காவலர் ஆனந்தராஜ், உளவு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சேகர், தலைமை காவலர் ராமகிருஷ்ணன் உட்பட போச்சம்பள்ளி மற்றும் நாகரசம்பட்டி காலவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வீரமலை கிராமத்தில் அவரது பெற்றோர்கள் விவசாயம் செய்து பிழைத்து வரும் நிலையில், தனது மகன் ஒரு திருடன் என இதுநாள் வரை தெரியாமல் இருந்துள்ளது. மேலும் அந்த கிராமத்தில் யாருக்கும் இவன் திருட்டு தொழில் ஈடுபட்டுள்ளது இதுநாள் வரை தெரியாமல் இருந்துள்ளது.
நகைக்கடை கொள்ளையில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து கிராமமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவனுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்ட காவ்யஅஞ்சலி என்கிற மனைவியும் 3 மாத குழந்தையும் பெங்களூருவில் உள்ள இவனது மாமனார் வீட்டில் உள்ளனர் என்பது குறப்பிடதக்கது