இன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷாவில் மக்கள் அனைவரும் குவிந்து வருகின்றனர். 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி நடைபெற்றது. இந்த நிலையில் இந்திய துணை குடியரசுத்தலைவர் கோவை வந்தார். இதற்காக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை மாவட்ட ஈஷா யோக மையத்திற்கு பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் மஹா சிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியான லிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் தனி விமான மூலம் சற்று முன் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி,

மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் குடியரசு துணைத்தலைவருக்கு வரவேற்பு அளித்தனர். குடியரசு துணைத்தலைவர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் குடியரசு துணைத்தலைவர், அங்கு மாலை 5.40 மணி முதல் 7 மணி வரை சிவராத்திரி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதனை தொடர்ந்து மாலை 7.30 மணி அளவில் கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் குடியரசுத் துணைத்தலைவர் புறப்படுகிறார்.
இதனை தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரிக்கு கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் வருகை வந்துள்ளனர். இதனால் ஈஷாவில் கூட்டம் நேரம் ஆக ஆக அலைமோதி வருகிறது.