தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி – சசிகலா கோரிக்கை

5 Min Read
வி.கே.சசிகலா

தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் உடனே சரிசெய்து, விரைவில் மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கனமழை பெய்ததன் விளைவாக தென் தமிழகமே பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி பெரும் அழிவை சந்தித்துள்ளன. ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. மழை நின்று இரண்டு வாரங்கள் ஆன நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றைக்கும் சில இடங்களில் மழை நீர் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய்விட்டது. திமுக தலைமையிலான அரசு தென் மாவட்ட பகுதிகளில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோன்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை காப்பாற்றிட எந்தவித நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் அல்லல் படும் மக்களின் துன்பங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எண்ணற்ற வீடுகள் இடிந்துள்ளன. கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி உடுத்த உடைகளின்றி தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். வாழை பயிரிட்டுள்ள விளைநிலங்கள், உப்பளங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. சாலை ஓரத்தில் கடை வைத்திருந்தவர்கள், சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஆடு, மாடு, கோழிகள் என லட்சக்கணக்கான உயிரினங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. மேலும், திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டி பகுதிகளில் உள்ள, பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன்களிலும் வெள்ள நீர் புகுந்து லட்சக்கணக்கான பொருட்கள் சேதமடைந்துவிட்டன.

வி.கே சசிகலா

கனமழையால் ஏற்கனவே மக்கள் தப்பிக்க வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு எந்தவித முன்னறிவிப்புமின்றி, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டத்தின் சோதனை ஓட்டம் என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் கன்னடியன் கால்வாயில் திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் மக்கள் மேலும் துன்பத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக மூன்றடைப்பு, முனஞ்சிப்பட்டி, தெய்வனாகப்பேரி, பருத்திப்பட்டு, ஆணையப்பபுரம் பகுதிகள் மற்றும் நாங்குநேரி திசையன்விளை தாலுகாக்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்திவிட்டன. இதுபோன்று திமுக தலைமையிலான அரசின் விளம்பர ஆசைக்கு மக்கள் பலிகடா ஆனதுதான் மிச்சம்.

திமுக தலைமையிலான அரசு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இத்தகைய பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களை திமுக தலைமையிலான அரசு கைவிட்ட போதிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 22ஆம் தேதி முதல் பத்து நாட்களாக அரிசி, சேலை, நைட்டி, லுங்கி, டி-ஷர்ட், போர்வை, பால் பவுடர், உடைமைகளை இழந்த சலவை தொழிலாளர்களுக்கு சலவைப்பெட்டி, பெண்களுக்கான நாப்கின், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தொழுநோய் மருத்துவமனைக்கு தேவையான ரெக்ஸின் படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி இருக்கிறோம். இதன் மூலம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை பயனடைந்துள்ளனர்.

அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை பகுதியில் சுமார் 750 சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இப்பகுதியில் தங்கள் உடைமைகளை முற்றிலும் இழந்து வாழ்வாதாரம் பாதித்த சலவைத்தொழிலாளர்களுக்கு தேவையான சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை டவுன், பகத்சிங் தெரு, பேட்டை நரிக்குறவர் காலனி, விளாகம், சி.என். கிராமம், குறுக்குத்துறை, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தெற்கு விஜயநாராயணம், சிவந்தியாபுரம், சங்கனாங்குளம், மன்னார்புரம் இந்திரா நகர், ஐந்தாங்கல் காலனி, ஏழாம் தாங்கல் காலனி, திருவிடைநேரி காலனி, பாளையங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட திடியூர் கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் கரைவலை பகுதியில் உள்ள மீனவ குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள், வலைகள் சேதமடைந்து இருப்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இப்பகுதி கடற்கரையில் அமைந்துள்ளதால் கடல் நீர் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்துவிடுவதை அறிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனே அவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பாறைக்கற்களை அமைத்து கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்பட்டதாக அப்பகுதி மீனவ மக்கள் சொல்லி நினைவுகூர்ந்தனர்.

அதேபோன்று, தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கடையம் கிராமம், கோவிந்தப்பேரி கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து இப்பகுதி மக்கள் மீண்டு வர இயலாமல் ஒவ்வொரு நாளும் தவித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் இன்றைக்கும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. திமுக தலைமையிலான அரசு தென் மாவட்டங்களில் எந்த லட்சணத்தில் மீட்பு பணிகளை செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் திமுக தலைமையிலான அரசோ இதை செய்துவிட்டோம், அதை செய்துவிட்டோம் என்று வெற்று அறிக்கைகளை மட்டும் கொடுத்து கொண்டு இருக்கிறது. ஆனால் தென் மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்நேரத்தில் எங்களோடு இல்லாமல் போய்விட்டாரே என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் எல்லோரும் ஏங்கி தவிக்கின்றனர்

எனவே, திமுக தலைமையிலான அரசு தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து வழங்கிட வேண்டும். தென் மாவட்ட பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review