சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் எனவும் வழக்கமாக பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, கும்பகோணம், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், கரூர், திருப்பூர், சேலம், கோவை, நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகமான SETC சொகுசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் செல்லும் சாதாரண பேருந்துகளும், திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் மற்றும் புதுச்சேரி செல்லும் பேருந்துகளும் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், சேலம், கோவை ஆகிய ஊர்களுக்கான சாதாரண பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து, திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் TNSTC எனப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து, ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகளும் புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சிதம்பரம், கடலூர் புதுச்சேரி செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும், கிளாம்பாக்கத்தில் இருந்து SETC சொகுசு பேருந்துகள் இயப்படும் என்றும், கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து செல்ல முன்பதிவு செய்த தென்மாவட்ட மக்கள், கோயம்பேட்டில் பேருந்து புறப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கு கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யாமல் விழுப்புரம், திருச்சி மார்க்கமாக செல்லும் பயணிகள், கோயம்பேடு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் நேரில்சென்று முன்பதிவு செய்ய வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையங்களில் காலை 7 மணி முதல் முன்பதிவு மையங்கள் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வழக்கமான பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கபட இருப்பதாகவும் அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.